அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலை குறைக்கவும் தமிழ்நாடு அரசு புது புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழக அரசு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், வளர்ச்சியை அதிகப்படுத்தவும் பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில் ஒன்றுதான் புதுமை பெண் திட்டம். இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளின் கல்வி ஊக்குவிக்கப்படுகிறது.

இது மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் உயர்கல்வி உறுதி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.மேலும் இத்திட்டத்தின் மூலம் பாலின சமத்துவத்திற்கு பங்களிப்பது மற்றும் பெண்களுக்கு அவர்களின் முழு திறனை உணர அதிகாரம் அளிப்பது போன்றவற்றை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

புதுமை பெண் திட்டம்:

மாணவிகளின் கல்வியை தொடர்வதை தடுக்கும் நிதித் தடைகளை அகற்றுவதில் புதுமை பெண் திட்டம் முக்கிய கவனம் செலுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி தான் இடைநிற்றல் மற்றும் இளம் வயது திருமணங்களுக்கு வழிவகுக்கும் என்பதால் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது.

புதுமை பெண் திட்டம் யார் தகுதி பெறுவார்கள்:

இத்திட்டத்தில் தகுதி பெற தமிழ்நாட்டில் வசிப்பவர்களாகவும், 6 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் ஆகவும் இருக்க வேண்டும். குறிப்பாக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படித்து கொண்டிருக்க வேண்டும். மேலும் குறைந்த வருமானம் உள்ள பின்னணியில் இருந்து வரும் மாணவிகளாக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் படி ஒவ்வொரு மாணவிக்கும் மாதாந்திர உதவி தொகையாக ரூ.1000 வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

இளங்களை பட்டம், டிப்ளமோ, ஐ.டி.ஐ தகுதி அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிற படிப்புகள் என பெண் தனது உயர்கல்வி முடிக்கும் வரை இந்த உதவி தொகை தொடரும்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 6 இலட்சம் மாணவிகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாக கொண்டு இத்திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.698 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

மேலும் இத்திட்டத்தில் பயன்பெற தங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் திட்டம் சம்பந்தமாக கேட்டு தெரிந்து கொண்டு பயன் பெறலாம்.