கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவையே சிறுதானிய உணவுகள் ஆகும். இதனை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். இவை அதிக ஆற்றலை தரக்கூடியவை. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்துள்ளது.
திணை
திணையில் அதிக அளவு இனிப்பு பலகாரம் செய்யலாம். அதாவது சர்க்கரை பொங்கல், உளுந்தங்களி, பாயாசம், அதிரசம், மைசூர்பாக் மற்றும் லட்டு ஆகியவற்றை செய்யலாம். இருப்பினும் திணையை உட்கொள்ளும் போது உடல் சூடு அதிகரிக்கும். திணை மாவுடன் தேனை கலந்து சாப்பிடும் போது கபம் நீங்கும், விரைவில் செரிமானமாகும்.
சாமை
எல்லாவித சமையலுக்கும் உகந்த சிறுதானியமாக சாமை விளங்குகிறது. சாதம், இட்லி, தோசை மற்றும் கிச்சடி போன்ற உணவுகளை இவற்றில் செய்யலாம். நெல்லரிசியை காட்டிலும் 7 மடங்கு நார்சத்து கொண்டதால் மலச்சிக்கல் மற்றும் ரத்த சோகை உள்ளவர்களுக்கு சாமை சிறந்த தீர்வை தருகிறது. இதில் அதிகளவு மினரல்ஸ் உள்ளதினால் நம் உடலில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை மிகவும் எளிதாக அதிகரிக்கிறது.
குதிரைவாலி
குதிரைவாலி சுவை மிகுந்தது. இவற்றில் இட்லி, இடியாப்பம் கொழுக்கட்டை போன்ற ஆவியில் வேக வைக்கும் உணவுகள் மிகவும் மிருதுவாக இருக்கும். அல்சர் மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். மேலும் வாய்வு பிரச்சினைகளை குணப்படுத்தும். குதிரைவாலி, உளுந்து சேர்த்து களியோ அல்லது கஞ்சியோ செய்து சாப்பிட இடுப்பு வலி மற்றும் வயிற்று கடுப்பு பிரச்சினை சரியாகும்.
வரகு
அடிப்படை உணவாக வரகரிசி திகழ்கிறது. மேலும் உடலின் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் அனைத்து வகையான திண்பண்டங்களையும் செய்யலாம். அதுவும் பிரியாணி செய்வதற்கு ஏற்றது. பித்த உடம்புக்காரர்கள், சளித்தொல்லையுள்ளவர்கள், தோல் பிரச்சினை உள்ளவர்கள் வரகரிசியை மிகவும் குறைவாக சாப்பிட வேண்டும்.
கேழ்வரகு
கேழ்வரகில் கஞ்சி, கூழ், களி, தோசை, அடை, லட்டு, அல்வா மற்றும் பக்கோடா என பலவகையான பலகாரங்கள் செய்யலாம். கேழ்வரகில் அதிகளவு கால்சியம் இருப்பதினால் மூட்டுவலி பிரச்சினைக்கு தீர்வாகிறது. கேழ்வரகு கூழானது மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
கம்பு
மிகவும் ஆரோக்கியமான கிராமத்து உணவாக இன்று வரை கம்மங்கூழ், தோசை, குழிப்பணியாரம் போன்ற உணவு இடம் பெற்று வருகிறது. கம்பு உடலுக்கு குளிர்ச்சி அளிக்க கூடிய சிறுதானிய உணவு.
புரதம் மற்றும் கால்சியம் கம்பில் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதே சமயம் சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் தோல்நோய் பிரச்சினை உள்ளவர்கள் கம்பை குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும்.